கிறீன் நினைவு வைத்தியசாலை
கிறீன் நினைவு வைத்தியசாலை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மானிப்பாயில் உள்ள இலாப நோக்கற்ற மருத்துவமனை ஆகும். இது அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் என்பவரால் 1848ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது அக்காலத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு மருத்துவத்துறையில் பயிற்சியளிக்கும் மையமாகவும் விளங்கியது. இந்த வகையில், இலங்கையின் முதல் மருத்துவப் பள்ளி இதுவே எனலாம். இதன் மூலம் கிறீன் தனது 30 ஆண்டுகால சேவையில் 60 உள்ளூர் இளைஞர்களை மருத்துவர்களாகப் பயிற்றுவித்துள்ளார். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், நவீன வசதிகளைக்கொண்ட ஒரு மருத்துவ நிறுவனமாக ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒன்றுபோலவே சேவை செய்தது. இப்போது இது அமெரிக்க இலங்கை மிசனின் வழிவந்த தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தினால் நடத்தப்படுகிறது. இப்போது அரசினால் நடத்தப்படும் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை நவீன வசதிகளோடு கூடிய இலவச வைத்தியசாலையாக இருப்பதால், மானிப்பாய் கிறீன் நினைவு வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் முதன்மையான வைத்தியசாலை என்னும் நிலையை இழந்துவிட்டது.


